Wednesday, April 4, 2012
நிலவின் விம்பம்
நிலவின் விம்பம் விழுந்ததில்
சிதைந்து போனது
குளத்தின் முகம்....!
சலனம்
வானம் அவிழ்த்த
மொட்டுக்கள்
மலர்ந்தன நிலத்தில்.....!
நிற வெறி
கருமேகங்கள் கண்ணீர் வடிக்கின்றனஇ
வானத்திலும் வந்துவிட்டதா
கறுப்பு வெள்ளை பாகுபாடு....!
மணிக்கூடு
தமக்குள் ஒற்றுமையில்லை
உலகுக்கு வழிகாட்டுகிறது
மணிக்கூடு....!
பனித்துளிகள்
மூச்சடக்கி மூழ்காமல்
முத்துக் குளித்தது இயற்கை
பனித்துளிகள்.....!
கௌரவம்
வாசலோடு நின்றுகொள்
பளிங்குத் தரையை
பாதங்கள் மிதிக்கட்டும்...!
பார்வை
திரையிட்டு மறைத்தேன்
தெளிவாகத் தெரிந்தது
பார்வை...!
நெருப்பு
எவ்வளவோ இரை கொடுத்தேன்
ஆனாலும் இறந்து போனது
நெருப்பு....!
தாலாட்டு
பாசை தெரியாத குழந்தை
ஆசையோடு ரசித்தது
தாலாட்டு
வண்ணாத்தி பூச்சி
ஒற்றைப் பூவிலிருந்து
ஒரு சோடி இதழ்கள் பறந்தன...!
வண்ணாத்தி பூச்சி
வென் மேகம்
இந்த விதவைகளின்
நெஞ்சினில் குமுறலுமில்லை
கண்களில் கண்ணீருமில்லை....!
வயல்காட்டு பொம்மை
பயிர் உள்ள
நிலத்திலெல்லாம்
உயிரில்லா ஊழியர்கள்....!
கலங்கரை விளக்கம்
வலைவீசப் போனவர்களின்
நிலைதேடி அலைகையில்
தலை சுத்துகிறது
நித்திரை
சோடிப் பூக்கள் வாடியதும்
செடி சாய்ந்தது.....!
நித்திரை
கடிதம்
மேலாடையை கலைந்தெறிந்தான்
உடலைமட்டும் உற்று நோக்கினான்...!
கடிதம்
தளபாடங்கள்
காட்டுக்குள் இறந்த மரங்கள்
வீட்டுக்குள் அடக்கம் செய்யப்பட்டன...!
தளபாடங்கள்.
மூடிய குடை
இதழ்விரித்துப் புத்த பூ
பழையபடி மொட்டானது....!
குடை
பலூன்கள்
உன்னைப் போன்றுதான் பலர்
வயிறு வளர்த்துவிட்டு
வாயைக் கட்டுகிறார்கள்....!
வெள்ளை மாளிகை
மனித நேயம் - இங்கே
புதைக்கப்படுவதால்
இதுவம் ஒரு கல்லறைதான்...!
பாதணிகள்
ஒரு வலதுசாரி, ஒரு இடதுசாரி
இருவரும் இணைபிரியாத
பாதசாரி....!
டயரி
அச்சேறப் போவதில்லை
அறிந்திருந்தும் எழுதுகிறார்கள்
டயரி...!
பத்திரிகை
உற்சாகமாக வெளியே வந்தேன்
உங்கள் கண்பட்டதுதான் பாருங்கள்
மூலையில் கிடக்கிறேன்....!
அடுப்பு
நாங்கள் வயிறாறும் போதெல்லாம்
வயிறெரிந்து வாடுகிறது
அடுப்பு....!
தேங்காய்
துருவித் துருவி எடுத்தேன்
கடைசிவரை ஒன்றை மட்டுமே
உளறியது....!
வர்ணவிளக்கு
கண்சாடை காட்டினால் போதும்
காலடியில் காத்திருக்கும்
உலகம்...!
பாலம்
எல்லேரும் கடந்து செல்கிறார்கள்
நட்டாற்றில் தவிக்கிறது
பாலம்....!
காய்ந்த இலை
ஒற்றைச் சிறகுடன் பறந்தது
ஒரு நொடியில் தரையில்
விழுந்தது....!
நவீன பாதைகள்
சிக்கலில்லாமல் செல்வதற்காய்
சிக்கித் தவிக்கின்றன
பாதைகள்...!
முதுமை
தடியினைத் தாங்கி நடந்தேன்
மடியினில் தாங்கிய உன்
ஞாபகங்களுடன்......!
மின்னழுத்தி
தடவிக் கொடுத்ததுதான் தாமதம்
அடங்கிப் போயின அடம்பிடித்த
ஆடைகள்...!
நாகரீக மங்கை
யன்னல்களும் கற்றுக் கொண்டனஇ
அவளால் இன்னும் முடியவில்லை
சேலை அணிவதற்கு....!
முள் வேலி
எதிரிகளென்று யாருமில்லை
எல்லையில் நிற்கிறது
முள் வேலி.....!
புகைப்படக் கருவி
வார்த்தைகளும் இல்லை
வரிகளும் இல்லை
வரைகிறது அழகிய கவிதை...!
பணம்
இழப்பேன் என்று தெரிந்திருந்தும்
அலுப்பின்றி உழைக்கிறேன்
உனை அடைவதற்காக....!
அதிஷ்டச் சீட்டு
நுளம்புகள் மட்டுமல்ல
இங்கே காகிதங்களும்
இரத்தம் உறிஞ்சுகின்றன....!
விலைவாசி
தாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம்
வீங்கிக் கொண்டு செல்கிறது
விலைவாசி....!
கடிகாரம்
எல்லாக் கண்களும் பார்த்திருக்க
காலத்தை கடத்திச் செல்கிறது
கடிகாரம்...!
கை மின்விளக்கு
இருட்டடிக்கப்பட்ட உண்மைகள்
வெளிச்சத்துக்கு வந்தன
மேனியில் மின்சாரம் பாய்ச்சியபோது.....!
பாதணிகள்
எத்தனைமுறை உதறித்தள்ளினாலும்
உறவு மட்டுத் தொடர்கிறது
பாதணிகள்
Monday, April 2, 2012
கதவு
வாய்மூடியிருப்பதும் குற்றமா?
வருபவரெல்லாம்
தடடிக் கேட்கிறார்களே....!
தீக்குச்சி
தலைக்குமேல் கோபம்
சீண்டிப் பார்ப்போரிடம் சீறிப் பாய்கிறது
தீக்குச்சி....!
பாலம்
இருபக்க உறவைப் பேணுவதில்
பக்கச்சார்பின்றி நடுநிலை வகிக்கிறது
பாலம்.....!
எரிபொருள்
ஓயாது ஓடியதில் மயக்கமுற்றது
ஒரு கிண்ணம் விஷம் குடித்ததில்
உயிர்பிழைத்தது...!
சேலை
அழகிய தேசத்தை
சுற்றிவளைத்து ஆக்கிரமித்தது
சேலை...!
மோதிரம்
பொன்னாகத்தான் இருக்கட்டுமே
பொருத்தமாக இல்லாவிட்டால்
வருத்தம்தான் விரலுக்கு.....!
நகங்கள்
விடிந்த பின்னும்
தெரிகிறது வளர்பிறை
விரல்களைப் பாருங்கள்....!
மழை மேகம்
தரையின் தாகம் தீர்ப்பதற்காய்
தண்ணீர்க் குடம் சுமக்கிறது
வானம்....!
தொடரூந்து
வரம்புமீறிய வேகம்
ஒரு வரம்புக்குள்தா தேகம்
தொடரூந்து....!
அருவி
உயரத்திலிருந்து விழுந்தது
உயிர்பிழைத்துக் கொண்டது
அருவி....!
தண்ணீர்குடம்
வறியவரின் வீட்டிலும்
வயிறு நிரம்பியிருக்கும்
தண்ணீர்குடம்...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)